8
ஒருவரின் சோகம் இன்னொருவரையும் எப்படிச் செயலற்றவராக்கிவிடுகிறது என்று நினைத்தான். அவனை வேறெவரும் இவ்வளவுதூரம் சிந்திக்கவைத்தில்லை. .................தொடரும் ....................
-மிதயா கானவி-
திவா அந்த மடலை தொடர்ந்து எழுதத் தொடங்கினான். எங்களுக்கு மிக அருகில்தான் அந்த எறிகணை விழுந்தது. பலத்த சத்தத்துடன் பாரிய புகை மண்டலம் எங்களைச் சூழ்ந்தது. காதுகள் செவிடாகிப்போய்விட்டன போலவும் கண்கள் மங்கிவிட்டன போலவும் உணர்ந்தேன். யாருக்கு என்ன நடந்ததென்று ஒன்றுமே தெரியவில்லை. எனினும் எல்லோரும் அழுதார்கள். பின்புதான் நிலைமை புரிந்தது. அதிஸ்ரவசமாய் எங்களில் எல்லோரும் உயிருடன் இருந்தோம். எனக்கும் தங்கையின் மகள் பவிதாவுக்கும் மட்டும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. எனக்கு நெஞ்சில் சிறிய காயம் பட்டிருப்பது தெரிந்தது. பவிதாவுக்குத்தான் கால்களிலும் கையிலும் பெரிய பெரிய காயங்களாய் தெரிந்தன. என்னசெய்தும் வெளியேறும் குருதியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனோ என்; கைகள் நடுங்கின. கையில் அகப்பட்ட ஒரு துணியினால் என் மார்பைச்சுற்றிக் கட்டிக்கொண்டு பவிதாவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத் தீர்மானித்தேன். அந்த இக்கட்டான நிலைமையில் எங்களை மருத்துவமனைக்கு யாரும் தூக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? நாங்கள்தான் எங்கள் பிள்ளையை உடனடியாக கொண்டுவரவேண்டி இருந்தது.
மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பவிதாவை தூக்கிக்கொண்டேன். கால்களில் வேகத்தைச் சேர்த்து வேகமாக மருத்துவமனையை நோக்கி ஓடிவந்தேன். தங்கையை எப்படியாவது அங்குவந்துசேர் என்று சொல்லிவிட்டுத்தான் ஓடிவந்தேன். அப்போது நான் என் வாயால் சுவாசித்தேன். பெரிது பெரிதான மூச்சை வாயால் இழுத்துவிட்டுக் கொண்டே ஓடினேன். போன பாதையெங்கும் மனித அவலக்குரல்களும் முனகல் சத்தங்களும் கேட்டுக்கொண்டேதான் இருந்தன. எனது காயத்திலிருந்து வழிந்த இரத்தம் என்னை முழுதுமாய் நனைத்துக்கொண்டிருந்தது. இறந்த மனிதர்களின் பிணங்களையும் மரணத்தின் பிடியில் சிக்கித்தவித்தபடி கிடந்த மனிதர்களையும் நான் கண்டேன். அவை எனது ஓட்டத்தை அதிகப்படுத்தின.
மருத்துவமனையை அடைந்ததும் ஒரு மயானத்தைக் கடந்து வந்துவிட்டவனைப்போல உணர்ந்தேன்.
அது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு. என் வாழ்வைப்போல பூமியும் இருண்டுவிட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் வான வெளியெங்கும் தீப்பிழம்புகளைக் கண்டேன். பொழுது மங்கிவிட்டதால் சீறிவரும் சன்னங்களையும் சிதறி வெடிக்கும் குண்டுகளையும் பிளம்புகளாகக் கண்டேன். நான் பவிதாவுடன் நிலத்தில் விழுந்து காதுகளை பொத்திக் கொண்டேன். அந்த விநாடியில் எனது பின்னந் தலையில் காயம் பட்டது.
இரத்தம் சூடாகக் குபுகுபுத்தது. எழத்தான் முயற்சித்தேன். முடியவில்லை. அப்படியே ஒருபக்கமாய் உருக்குலைந்து சரிந்தேன். எனது மங்கிய பார்வையில் நீதான் ஓடிவந்து என்முன்னால் நின்றாய். அப்போதுகூட நீ மிகுந்த நிதானம் மிக்கவளாய்த் தெரிந்தாய்.
எனக்கு நினைவு திரும்பியபோது இளம் வைத்தியன் ஒருவன் எனக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தான்.
'உங்களது நெஞ்சுக் காயத்திற்கு ரியூப் போட வேணும். நல்லகாலம் கொஞ்சம் முந்தி வந்திட்டிங்கள்.' என்றான்.
வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கும் வேளையிலும் அவன் நிதானமாக என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தான். சுள்ளென என் விலாவில் வலித்ததை உணர்ந்து அருண்டேன். சற்றுநேரத்தில் அவ்விடம் விறைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அவன் என் மார்பினுள் ரியூப்பை செலுத்தும் முயற்சியில் இறங்கினான். ரியூப் சரசரவென உள்ளிறங்கியதை உணர்ந்தேன். அச்சமும் வேதனையும் என்னை பாடாய்;படுத்த தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டேன்.
அடுத்த கட்டிலில் நீ என் பவிதாக் குட்டிக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தாய்.
'ஆ. என் பவிதாக்குட்டி உயிரோடு இருக்கிறாள். அது போதும் அதுபோதும்' என்று என் உள்மனது சொல்வதை உணர்ந்தேன்.
வெடியோசைகளை நித்தம் நித்தம் கேட்டு பழக்கப்பட்டு விட்டாலும் திடீரென மருத்துவமனைக் கட்டிடத்தின் பகுதியில் விழுந்த எறிகணை எல்லோரையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருந்தது. காயப்பட்டுக்கிடந்தவர்களின் கதறல் ஒலி வானத்தைப் பிழந்துவிடும்போல அதிர்ந்தது. சிலகணம் மூடிவிட்ட கண்களை நான் திறந்தபோது எனக்கு வைத்தியம் செய்துகொண்டிருந்த வைத்தினின் நெஞ்சில் இரத்தம். அவனது மார்பில் சிதறுதுண்டேதும் பாய்ந்திருக்க வேண்டும். படாரெனக் கீழே விழுந்தான்.
அவனது மூக்கிலும் கடைவாயிலும் இரத்தம் வெளியேறியது. கையில் பிடித்த கத்தரிக்கோலும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்புமாய் அப்படியே அவன் நிலத்தில் அமைதியாகிக் கிடந்தான். அதைக் கண்டவுடன் நான் என்னை அறியாமல் கத்தினேன்.
'ஐயோ ஐயோ டொக்டரை யாராவது காப்பாத்துங்க. காப்பாத்துங்க' என்று. அப்போதும் நீதான் ஓடிவந்தாய். அந்த வைத்தியனின் உடலைவிட்டு உயிர் போய்விட்டது என்பதை கணப்பொழுதில் உறுதிப்படுத்தினாய். எனினும் நீ அவனது சாவுக்காகப் புலம்பிக் கொண்டிருக்கவில்லை. ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்பதிலேயே கருத்தாக இருந்தாய். அவன் செய்த குறை வேலையை நீ தொடர்ந்தாய். எனது நெஞ்சில் இறக்கிய ரியூப்பிலிருந்து வெளியேவந்த குருதியை மீண்டும் எனக்கே ஏற்றினாய். சேலைன் போத்தில் எனக்காகவே இருந்ததைப்போல ஒன்றை எடுத்துக்கொண்டோடிவந்து என்னுடலில் ஏற்றினாய்.
அப்போதெல்லாம் உன்னிடம் எவ்வளவு துடிப்பிருந்தது தெரியுமா? அதை நீ புரிந்துதான் செயற்பட்டாயா இல்லையா தெரியவில்லை. ஆனால் நீ உன் கடமையில் கருத்தூன்றியவளாய் செயற்பட்டாய். உன் துரிதமான செயற்பாட்டால்தான் அன்று என் உயிர் காப்பாற்றப்பட்டது. எனக்கு வைத்தியம் செய்தவனின் வெற்றுடல் அப்படியே அங்கேயேதான் கிடந்தது. அவ்வளவு நிதானமாகச் செயற்பட உன்னால் எப்படி முடிந்தது? என்னால் இப்பவும்கூட நம்பமுடியவில்லை. ஒன்றாக ஒரே மருத்துவமனையில் உன்னுடன் சேர்ந்து வேலைசெய்த தியாகி இறந்துவிட்டான். அவனுக்காக நீ, துளி அளவும் தேங்கிவிடவில்லை. ஆனால் நான் யாரோ ஒருவன்.உனக்கு முன்பின் தெரியாத சாதாரண மனிதன். எனினும் ஒவ்வொரு உயிரின் பெறுமதிக்காகவும் நீ வேலை செய்தாய். நீ அந்த வைத்தியனுக்காக, உனது தோழனுக்காக அன்று சில கணங்களேணும் அழுதுகொண்டு நின்றிருப்பாயானால் எனது உயிர் என்னுடலைவிட்டும் பறந்திருக்கும்.
அத்தனை இயலாமையிலும் உன்னைத் தொடர்ந்தன என் கண்கள். உனது கண்களும் குளமாகித்தான் இருந்தன. அப்பப்போ சில துளிகள் உன் கன்னங்களில் உருண்டோடியதைக் கவனித்தேன். எனினும் உனது கைகளும் கால்களும் ஓரிடத்தில் தரிக்கவேயில்லை. ஓடியோடிக் கடமை செய்தாய்.
இந்த மடலை நான் உனக்கு எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் எனது பின்னந்தலையில் ஊசியால் குத்துவதைப்போன்ற வலியை உணர்கின்றேன். அன்று எனக்கும் பவிதாவுக்கும் அவசரமாகக் குருதி ஏற்றவேண்டி இருந்தது. சொந்தங்கள் யாரும் குருதிவழங்க முன்வரவில்லை. மனதார வழங்கிவிடுமளவுக்கு அவர்களிடம் போதியளவு குருதி உடலில் இருக்கவில்லை. அல்லது அடுத்த நிமிடம் அவர்கள் காயப்பட்டாலும் அவர்களுக்கேற்படப்போகும் குருதியிழப்பு அவர்களை அல்லவா சாகடித்துவிடும். யாரையும் நோக முடியாது. பலபேரிடம் காசு பணம் கொடுத்துக் கெஞ்சியும் கிடைக்காத குருதியை நீதான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் வழங்கினாய். உன்னிலிருந்து எடுத்தேற்றி எங்கள் இருவரின் உயிர்களையும் காப்பாற்றினாய். அப்படி எத்தனை பேரின் உயர்களைக் காப்பாற்றி இருப்பாய் நீ. உன்னை ஒரு சாதாரண மருத்துவத் தாதியாகவோ மருத்துவராகவோ என்னால் பார்க்க முடியாது. நீ ஒரு சாதனைப் பெண். உன்னளவில் அல்லது உன் தோழர்களளவில் யாரும் மருத்துவம் செய்திருக்க முடியாது. அதை என்னைப்போன்ற வன்னிமாந்தர்களால் மட்டும்தான் சொல்ல முடியும். உலகத்திற்கு உங்கள் பணியின் உயர்வைப்பற்றித்
ஏனோ திவாவிற்கு கண்கள் கலங்கின. தியாகிகளின் உழைப்பை எண்ணிக் கசிந்தனவா அல்லது அவனது இயலாமையை எண்ணிக் கசிகின்றனவா என்பதை அவனால் இனங்காண முடியவில்லை. தொடர்ந்து அவனால் எழுத முடியவில்லை. அப்படியே வைத்துவிட்டு எழுந்து நின்றான். கண்களைத் துடைத்துவிட்டு சிறிதுநேரம் நடைபழகினான். அந்த நடை மிகவும் தளர்ந்துபோன அவனது இதய வலிமையைத்தான் காட்டியது. ஒருவரின் சோகம் இன்னொருவரையும் எப்படிச் செயலற்றவராக்கிவிடுகிறது என்று நினைத்தான். அவனை வேறெவரும் இவ்வளவுதூரம் சிந்திக்கவைத்தில்லை. .................தொடரும் ....................
-மிதயா கானவி-
