Friday, 31 January 2014

கருனைநதி நாவல் நதி -2



2


  •  முகாமிலும் தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக இருந்தது. ஒரேயொரு குழாய் கிணறு. அதில் எப்போதும் குடிதண்ணீருக்கு அடிபிடியாகவே இருக்கும். வன்னியில் எவ்வளவோ ஒற்றுமையாகத்தான் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள்மீதான தொடர் சோதனைகளும் வேதனைகளும்தான் அவர்களை மாற்றியதோ என்னவோ? பலர்மனிதத்தை தொலைத்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். குடிப்பதற்கே தண்ணீர் அரைகுறைதான். அப்படியானால் குளிப்பதற்கு? ஆண்கள் ஓரளவு சமாளித்தார்கள். பெண்கள் நிலைதான் எப்போதும் தீராத பிரச்சினையாக இருந்தது. எந்த மறைவுமற்ற இடத்தில் வெட்ட வெளியில் நின்று குளிக்கவேண்டி இருந்தது. சில பெண்கள் இருட்டும்வரை காத்திருந்து இரவில் குளித்தார்கள்.  அதற்கு உடல்நிலை இடந்தராத பெண்கள் பட்டப்பகலில் பலர் பார்க்கக் குளிக்கவேண்டி இருந்தது. அவ்வாறான சூழலில் தமிழ்ச்சமூகத்தின் அருமையான பண்புகள் மாறிக்கொண்டே இருந்தன.
  • விடியலைச்சொல்ல அங்கு எந்தச் சேவலும் கூவுவதில்லை. காவலுக்கு நிற்கும் படையினரின் பலமான சிங்களக் குரல்கள் காதில் விழ, அன்றும் உறக்கம்கலைந்து எழுந்தான் திவா. அவசர அவசரமாக இரண்டு வாளிகளுடன் கிணற்றடிக்குச் சென்றான். அங்கு ஏற்கெனவே இருநூறுக்கு மேற்பட்ட வாளிகள், குடங்களின் வரிசை நீண்டிருந்தது. அந்த வரிசையில் தனது வாளிகளையும் வைத்துவிட்டுக் காத்திருந்தான். ஓவ்வொருவரும் தமது வாளிகளிலும் குடங்களிலும் தண்ணீரைப் பிடிக்கப் பிடிக்க, மற்றவர்கள் தமது வாளிகளையும் குடங்களையும் நகர்த்தி நகர்த்தி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது அந்த முகாமே பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. விடியல் மெல்ல மெல்லப் பகலாக, சூரியன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தான்.
  • 'அப்பாடி என்ர வாளி கிட்டவா வந்திட்டுது' என்ற பெருமூச்சுடன் முன்னிருந்த வாளி நகர அவனும் தனது வாளிகளை நகர்த்தினான். அப்போதுதான் சற்றும் எதிர்பாராமல் அவளைக் கண்டான். அவனது கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை.
'இவள் அவள்தானா?'
ஒழுங்காக வாரப்படாத தலைமுடி. செருப்பில்லாத கால்கள். அழுக்கான ஆடை. முன்னரைவிடவும் மிகவும் மெலிந்துபோயிருந்தாள்.
இவள் எப்படி அவளாக இருக்க முடியும்? இதயத்தில் எழுந்த அவசர எண்ணத்திலும் படபடப்பிலும் தன்னையிழந்து மனங்குளம்பினான் திவா.
'அது அவளே தான்'
'ஐயோ, எப்பிடிக் கூப்பிடுறது? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறாள்? ஆ. ஆ... என்னயப் பாக்கிறாள்.... ஏன் சிரிக்கக்கூட இல்லாமல் ...... என்னயத்தான் கவனிச்சுப் பாக்கிறாள்.... அதென்ன அவளுடைய பார்வை அப்படியொரு மாதிரியாய்........ ஐ. சீ, அவளுக்கு மூளை தட்டிற்றோ???'

என்றெல்லாம் அச்சாணி உடைந்த சில்லுப்போல அவனது மனம் தடம்புரண்டோடியது. தன்னை ஒருநிலைப்படுத்த இயலாமல் தவித்தான்.
'சே. எனக்கு என்ன நடந்தது? எதுக்காக இப்பிடி உணர்ச்சிவசப்படுறன்?' என்றவனின் நினைவலைகளை அவளது முறை என்பது குளப்பியது. ஆமாம் அடுத்து தண்ணீர் நிரப்ப வேண்டியள் அவள்தான். திவா பாய்ந்துசென்று அவளது வாளிகளை தண்ணீரால் நிரப்பினான். பதிலுக்கு நன்றி என்று ஒற்றைச்சொல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். அதை அவள் யாரோ ஒருவனுக்கு சும்மா கடமைக்காகச் சொல்வதைப்போலச் சொல்லிவிட்டுப் போகிறாளே என்று கவலையாக இருந்தது அவனுக்கு. தனது வாளிகளிலும் தண்ணீரை நிரப்பி தூக்கிக்கொண்டுவந்து, தேடியபோது அவளைக் காணவில்லை.
அவனை அறியாமலேயே அவனது இதயம் படபடவென அடித்துக்கொண்டு கிடந்தது. இரண்டு வாளிகளும் வழமைக்கு மாறாக மனப்பாரத்துடன் சேர்ந்து கனத்தன. கொட்டிலில் கொண்டுபோய் வாளிகளைவைத்துவிட்டு குழம்பிய மனதுடன் பைமீது தலைவைத்துச் சரிந்துகிடந்த அவனை அந்த மூதாட்டி கவனித்திருக்கவேண்டும்.
'ஏன் மோன ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? உடம்பு கிடம்பு சரியில்லையா?' பாட்டி அக்கறையோடு விசாரித்தார்.
'இல்லப் பாட்டி. ஒண்டுமில்ல.' என்று சமாளித்தான்.
'பிள்ள காலங்காத்தால தண்ணிக்கு நிண்டு களைச்சுப் போட்டுது. எல்லாம் எங்கட விதி?' என்று தமிழரின் விதியை நொந்துகொண்ட பாட்டி அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் சொன்னார்,
'கவலப்படாத தம்பி. ஆண்டவன் கண் திறப்பான்.'
பாட்டி சொன்ன வார்த்தைகளில் எதுவும் அவனது காயத்திற்கு மருந்திடவில்லை. எனினும் அந்தப்பாட்டி சாப்பிட அழைத்தபோது அதை அவனால் மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில் பாட்டியிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.
உணவுத்தட்டுடன் இருந்தவனின் நினைவெல்லாம் அவளைச்சுற்றியே சுழன்றுகொண்டிருந்தன. சொந்த வீட்டில் அவன் சாப்பிடும்போது வட்டமடித்துப் பறந்துதிரியும் வளர்ப்புக் கோழிகளும் குஞ்சுகளும். கொஞ்சம் தள்ளிநின்று செட்டை அடித்து வீறாப்புக் காட்டும் தலைமைச் சேவல். செல்லமாகக் காலைக் கடிக்கும் குட்டி நாய். இப்போது அவனிடம் எதுவுமேயில்லாதது பெரும் தனிமையை உணர்த்தியது. சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை யாரும் அவதானிக்கவில்லை. பாட்டியும் நிலத்தில் சரிந்துவிட்டார். அவன்முன் பிளாஸ்டிக் தட்டிலிருந்த அவித்த கடலையை கொண்டுபோய் குப்பைவாளியில் கொட்டினான்.
இன்று எப்படியும் அவளைத் தேடிக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற ஏக்கத்துடன் முகாமில் அறிமுகமாகிவிட்ட நண்பன் ஒருவனிடம் சென்றான் திவா. தனது சொந்த விடயங்களை யாருடனும் அலட்டிக்கொள்ளாத சுபாவம் கொண்டவன்தான் திவா. ஆனாலும் அவளை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற தவிப்புடன் நண்பனைத் தேடிச்சென்றான்.
'கரன்'
'என்ன மச்சான் சொல்லு. ரெண்டு நாளா ஆளக்காணேல்ல'
'கொஞ்சம் பிஸி'
'என்ன பிஸியோ?' என்று சிரித்தான் கரன்.முகாமில் இருப்பவனுக்கு பிஸியா என்றது அவனது குரல் கேலியாக.
'கரன் நான் ஒராளக் கண்டுபிடிக்க வேணும். உன்னால அதுக்கு உதவ முடியுமா சொல்லு'
'நிச்சயம். சொல்லுடா. யாராள்?'
திவா அவளின் அடையாளத்தைச் சொன்னான்.
'சரியடா. கவலப்படாத. ட்ரை பண்றன். அவட பேரையும் அட்ரசையும் சொல்ரா உடன ஜி.எஸ்ஸிட்டப் போய் விசாரிச்சிட்டு வாறன்.' என்றான் நண்பன்.
திவாவின் இதயத்தில் சுள்ளென வலித்தது, அவன் எப்படி பெயர் தெரியாது என்று சொல்ல முடியும்? சொன்னால் கரனே கேலியாய் நினைக்க மாட்டானா?
'வேண்டாம் கரன். பிறகு பாப்பம்' என்று தடுமாறினான் திவா. பின்பு
'ஜி.எஸ்ஸிட்ட எல்லாம் எதுக்குடா கரன்? நானும் நீயும் சும்மா முகாமுக்குள்ளயே தேடுவமேடா.' என்றான்.
இருவரும் முகாமின் இண்டு  இடுக்கெல்லாம் அவளைத்தேடி அலைந்தார்கள். அவளோ அவர்களது கண்களில் படவே இல்லை.அன்று முழுவதும் தேடியும் அவள் கிடைக்கவில்லை. அவளை இதேமுகாமில் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. அந்த நம்பிக்கையோடும் அடுத்தநாள் அவளை கண்டுபிடித்துவிடப்போகும் எண்ணத்திலுமாய் கொட்டிலுக்கு வந்தான்.-  


மித்யா கானவி

Wednesday, 29 January 2014

கருனைநதி...................நாவல்


அன்பை எழுதுதல் -----------
காலத்தின் தேவையொன்றை நிறைவேற்றியிருக்கிறார் கானவி.அவரது நாவலை எழுத்துபிரதியாக படித்து முடித்தபோது என்னுள் எழுந்த கருத்து அது. 
பெரும் துயர் சுமந்த வரலாற்றை கொண்டிருக்கிறது தமிழினம் 
நீண்ட பெரும் போரில் நிகழ்ந்த அவலங்கள் நிச்சயம் பதிவுசெய்யப்பட வேண்டும் .இலக்கிய பதிவென்பது அந் நிகழ்வுகளை உணர்வுத் தளங்களில் நின்று பதிவுசெய்வது. அந்த வகையில் கானவி அவர்களின் கருணை நதி முள்ளி வாய்க்காலில் தமிழர் எதிர்நோக்கிய நெருக்கடியான வாழ்வு சூழலை பதிவு செய்கிறது.
போர் சூழலில் நின்று மக்கள் துயர்துடைத்த மருத்தவ பணியாளர்களின் கருணை போற்றுதற்குரியது அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
இந்த வகையில் முள்ளிவாய்க்கால் மக்களின் பேரவலமும் மருத்துவ பணியாளர்களது அர்ப்பணிப்பான சேவையும் இவரது குறு நாவலில் பதிவுசெய்யப்படுகிறது 
உண்மையாக காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனித நேய அணுகுமுறை 
கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது்
இவர் மருத்துவ பணி புரிபவர் என்பதால் அவரது சொந்த அனுபவங்கள் கதையின் யதார்த்தத்தை அதிகரித்திருக்கிறது.. 
எழுத்துலகிற்கு புதுதியவராக இருந்தாலும் எடுத்துகொண்ட கதைக்களம் ஆவணப்படுத்த வேண்டியதாகவும் 
மீள வாசிக்கப்பட வேண்டியதாகவும் அமைகிறது இதுவே நாவலின் வெற்றியை தீர்மானிக்கிறதென்றும் கூறலாம் .
ஓய்வு நேரம் அதிகம் கிடைக்காத பணியொன்றில் இருந்தாலம் .தமிழ் இலக்கியத்தில் கொண்ட விருப்பால் இந்நாவலை தந்த கானவி பாராட்டுக்குரியவர் . இளையவர் என்பதால் இன்னும் பல வீச்சான படைப்புக்களை இலக்கிய உலகம் இவரிடமிருந்து எதிர்பார்க்கிறது 
சுருங்க சொன்னால் கானவி அன்பை எழுதியிருக்கிறார் வாழ்த்துக்கள்.
க.சோதிதாசன் (வேலணையூர்-தாஸ்)
தலைவர் 
யாழ் இலக்கியக்குவியம் 
இல 37 2ம் குறுக்குத்தெரு கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்.       

என் எண்ணங்களின் சாகாவரம்
கருணை நதி எனும் எனதுமுதலாவது நாவலைவெளியீடுவதில் மகிழ்வடைகின்றேன்.2005 இல் மருத்துவ மடியில் என்னும் சிறுகதை தொகுதியையும் தந்திருந்தேன்.
எனது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் வித்தியாசமானவை கடந்துவந்தபாதைமேடு பள்ளங்களுடன் முட்கள் பரப்பியதாய் இருந்தது.
எனது நீண்ட காலமருத்துவபணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல ஆயிரம்.அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடகவே கருணை நதி கருக்கொண்டது  என் எண்ணக்குழந்தைகள் செழித்துவளர
உரமிட்டுக்கொண்டிருக்கும்முகமறியா என் நட்பு உள்ளங்கள் அணைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்
என் நீண்ட இலக்கிய பயணத்திற்கு வாசகர்களாகிய உங்களின் கருத்துக்கள்தான் வலுச்சேர்க்கும்.உங்கள் கருத்துகளை சொல்லமறவாதிர்கள்

கிளிநொச்சியிலிருந்து ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியாக எஞ்சியிருந்த வட்டுவாகல் பகுதிக்கு திவாவும் வந்திருந்தான். அந்த இடப்பெயர்வின்போது மக்கள்பட்ட அவலத்திற்கு அளவிடையே கிடையாது. அந்த வலிகள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பேரலைகளாகப் பொங்கி குமுறிக்கொண்டேயிருந்தன.

எப்படியாவது திரும்பவும் தங்கள் ஊருக்குப்போகவேண்டும் என்ற வன்னிமாந்தர்களது ஏக்கமும் ஆவலும் திவாவிற்குள்ளும் இருந்தது. வன்னிப்போரின் இறுதி நாட்களில் எல்லோரிடமும் இருந்த நம்பிக்கை பனித்துளிபோல நெஞ்சைவிட்டு காயத்தொடங்கிவிட்டது.

17.05.2009 அன்று வன்னியில் கடைசிவரை இருந்து இடம்பெயர்ந்த பல இலட்சம் மக்களில் திவாவும் ஒருவனாக வவுனியாவின் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தான்.

அந்தமுகாமில் வசித்தவர்களில் அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இருக்கவில்லை. உறவுகள் யாருமற்ற தனிமை அவனை வாட்டியது. வன்னியில் காயமடைந்து நொந்துபோயிருந்த அவனுக்கு ஆறுதலளிக்க தாய்மடியைத் தேடியது மனம். ஆனால் அவனுக்கு எந்த உறவினரதும் தொடர்புகூடக் கிடைக்கவில்லை.

பட்டி மாடுகளைப்போல பல ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருந்தது அரசு. எங்கட ஊரில மாடுகளுக்குக்கூட அத்துப்படியான சுதந்திரம் இருந்தது என்று நினைக்க அவனுக்கு மனத்தில் எரிச்சலாய் எரிந்தது.

அந்த முகாமைச்சுற்றி பலமான முட்கம்பி வேலிகள். அதனை அண்மித்து இராணுவக் காவலரண்கள். எல்லாமே புதிய சூழலாக இருந்தமையால் அது மக்களை அச்சப்படவைத்துக்கொண்டிருந்தது. அவனும் படையினரின் ஒவ்வொரு பதிவு நடவடிக்கைகளின் போதும் புலனாய்வாளர்களாம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களின் வருகையின்போதும் அச்சமும் நிம்மதியின்மையுமாகத்தான் இருந்தான். ஏனெனில் போராளியாக இருந்து தடுப்பு முகாம்களுக்குப் போகாமல் முகாம்களில் இருந்தவர்களையும் போராளிகளாக இருந்திருக்கக்கூடும் என்று சந்தேகப்படுபவர்களையும் படையினர் அங்கிருந்து அழைத்துச்சென்றுகொண்டிருந்தார்கள். அப்படி அழைத்துச் செல்பவர்களில் பலர் போராளிகளுக்கான தடுப்பு முகாம்களில் விடப்பட்டார்கள். சிலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். சிலர் சிலரின் மனிதாபிமானச் செயற்பாடுகளால் (லஞ்சம் வாங்கியபின்) அவர்களது பெற்றோரிடம் சென்றும் சேர்ந்தார்கள். சிலர் காணாமலும் போய்விட்டார்கள்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் சத்துள்ள உணவின்றித்தான் உயிர்வாழ்ந்தனர் மக்கள். பல உடைமைகளையும் உயிர்களையும் பறிகொடுத்திருந்தனர். அந்த அவலங்களையெல்லாம் நெஞ்சில் பெரும் தீப்பிழம்பாகச் சுமந்துகொண்டு எஞ்சிய உயிர்களுடன் மட்டும் வவுனியாவில் தஞ்சமடைந்திருந்தனர் அந்த மக்கள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப்போல அந்தச் சனங்களுக்கு முகாமிலும் பல தொற்றுநோய்களும் தொற்றித் தொற்றித் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.

அவர்களால் என்னசெய்யமுடியும்? அந்த முகாமிலும் உரியமருத்துவ வசதி இருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் மேலதிக சிகிச்சைக்காக வெளியில் சென்றுவரவும் அப்போது அனுமதிக்கப்படவில்லை. வன்னியில் நடந்த அந்தக் கொடூரப் போரிலே உயிர் தப்பியவர்கள் பலர் அந்த முகாமில் நோய்வாய்ப்பட்டும் இறந்தனர். அந்தக் கொடுமையான காட்சிகளை கண்ணூடாகக்கண்ட திவா வெதும்பிப் போனான்.

புதிதாகக் காடு வெட்டப்பட்டிருந்த கரடுமுரடான நிலத்தில் அந்த முகாம் அமைந்திருந்தது. காட்டு மரங்கள் ஒன்றுகூட இல்லாமல் வெட்டை வெளியாக்கப்பட்ட இடத்தில்தான் தறப்பாள் கொட்டில்கள் நிரம்பி வழிந்தன. கொழுத்தி எரிக்கும் வெய்யிலில் முழத்துக்கு முழம் தறப்பாள் கொட்டில்கள். இருப்பிடங்களிற்கு அருகாமையிலேயே மலசல கூடங்கள், குடிநீர்த்தாங்கிகள், சமையல்கூடங்கள். மொத்தத்தில் எல்லாமே அங்கு  சுகாதாரத்திற்கு மாறாகவே அமைந்திருந்தன.

ஒரேயொரு தறப்பாள் கொட்டிலில் பத்துப்பேர் இருக்க வேண்டும். சிறிய குடும்பமாக இருந்தால் ஒரே கொட்டிலில் மூன்று நான்கு குடும்பங்களும் இருக்க வேண்டும்.

திவாவும் தெரிந்த ஒரு குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டான். அந்தக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா, அத்தான், அவர்களின் பிள்ளைகள் இருவர், தம்பி, இரண்டு இளம் பெண்கள் ஆகியோருடன் வயதான மூதாட்டி ஒருவரும் இருந்தார்.

திவாவிற்கு அது எப்போதுமே பழக்கப்படாத வாழ்க்கை. பெண் பிள்ளைகளுடன் அதுவும் முன்பின் அறிமுகமே இல்லாதவர்களுடன் ஒரே கொட்டிலில் இருப்பது பலவகையில் மனச்சங்கடமாகவே இருந்தது. அங்கு யாருக்கும் படுத்துறங்குவதற்கு தனியான மறைவிடம் எதுவும் இருக்கவில்லை. உடை மாற்றக்கூட மிகவும் சிரமப்படுவார்கள்.

திவா ஒரு தங்கையுடன் கூடப்பிறந்தவன்தான். எனினும் வீட்டில் இவ்வாறான சிக்கல் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிவதுபோல இருந்தது.

உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களின் கைகளில் பணம் புழங்கியது. கூட்டுக்குடும்பங்களாக வன்னிமண்ணில் விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக வாழ்;ந்த பலர் மீளமுடியாமல் தவித்தார்கள்.

முகாமில் பலநூறு பேருக்கு ஒன்றாகச் சமைக்கும் உணவில் சுவையே இருக்கவில்லை. பசிக்காக மட்டுமே சாப்பிடவேண்டியதாய் இருந்தது. சமையல் செய்வது, அதைப் பங்கிடுவது எல்லாமே மக்களால்தான் செய்யப்பட்டது. அதனை படையினர் மேற்பார்வை செய்தார்கள்.  திவா இருந்த கொட்டிலில் இரண்டு குட்டிப்பையன்களும் இருந்தார்கள்.

'அம்மா எனக்கு சாப்பாடு வேணாம் எண்டால் வேணாம்தான்.'

'இது என்ன ஒவ்வொருநாளும் கடலை? எனக்கு இடியப்பம்தான் அவிச்சுத்தா'

'அம்;மா இண்டைக்கு குழல்பிட்டு அவி'

என்றெல்லாம் அந்த வாண்டுப்பையன்கள் முகாம் உணவை வெறுத்தொதுக்கினார்கள்.  அந்தத் தாயாரால் அப்போதைக்கு செய்துகொடுக்க முடியாத உணவுகளையே விரும்பிக் கேட்பார்கள். அப்போதெல்லாம் அந்தத் தாயாரின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்தத் தாய் இவ்வாறான உணவுகளை தயாரிக்க எங்கேபோவாள்? அவற்றை செய்துகொடுப்பதற்குப் பணம் வேண்டுமே. வன்னியில் இறுதிநாள்வரை பொத்திப் பொத்தி வைத்திருந்து கொண்டுவந்த சொற்ப பணமும் செலவாகிவிட்டது. இவ்வாறுதான் பல்லாயிரங் குடும்பங்களின் வாழ்க்கையும் விரக்தியோடும் ஏக்கத்தோடும் விருப்பமின்றியும் கழிந்துபோய்க்கொண்டிருந்தன.

அந்தந்த நேரத்திற்கு உணவுத்தட்டுகளுடன் வரிசையில் கையேந்தி நிற்கவேண்டும். அங்கு வந்த புதிதில் இரண்டொருநாட்கள் அவனை நித்திரை வாட்டி வதைத்தது. அதை நித்திரை என்பதா முழு மயக்கம் என்பதா தெரியவில்லை. உரிய நேரத்திற்கு வரிசைக்குப் போகாததால் திவா சாப்பாடில்லாமலும் இருந்திருக்கிறான். அவ்வாறான சமயங்களில் அவன் அவமானத்தால் தலைகுனிந்து அழுவான். அடிமைபோல வாழ்வதைவிட வன்னியிலேயே செத்திருக்கலாம் என அவனது மனம் அங்கலாய்க்கும்.

திவா தனக்கு வயதுவந்த நாளிலிருந்தே எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதவன். கௌரவமாக உழைத்து, இருப்பதை வைத்து சமாளித்து, நாலுபேர் மதிக்க வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவன். இப்போது கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியே வேப்பங்காயாய் மனசில் கசந்தது. படித்தென்ன பட்டம் பெற்றென்ன? பண்பிருந்தென்ன பணமிருந்துதான் என்ன? அடிமையாகவேதான் வாழ்கின்றோம் என்றெல்லாம் அவனது மனம் கசப்பாய்க் கசந்தது.

இதுகூட நான் எனது குடும்பம் என்று வாழ்ந்ததற்காக இறைவன் தந்த தண்டனைதான் என நினைத்து நொந்து கொண்டான்.

நாம் எல்லோருமே ஒன்றுசேர்ந்து உழைத்திருந்தால்...............? என்று அவனது மனச்சாட்சி அவனுடன் வாதாடும். உண்மை உறைக்கும். எனினும் காலங்கடந்த அந்த ஞானத்தால் பயனென்ன? திவா தன்னைப்போலவே முடிந்துவிட்ட செயல்களாலும் முடியாத நினைவுகளாலும் திண்டாடிக் கொண்டிருந்த பலரைப்போல தறப்பாள் கொட்டிலுக்குள் சோர்ந்துபோய்க் கிடந்தான். அவனுடைய உணர்வுகள்கூட அவனுக்குள் மனப்போராட்டத்தையும் இயலாமையையும்தான் கிளப்பிக்கொண்டிருந்தன. எந்தவேலையுமின்றி கிடந்தாலும்கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உறக்கம்கூட இரக்கமில்லாத கனவுகளால் கிழித்தெறிaப்பட்டன. -............இன்னும்வரும்