திவாவின் இதயம் ரணமானது. தனது கௌரவத்தைக்கூடப் பார்க்காமல் எழுந்து அவளின் பின்னால் ஓடவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அவ்வாறு அவன் செய்யவில்லை. ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவன் மட்டும் இருக்கையில் இருந்தான் மௌனமாக. மனமோ அவளின் பின்னால் கடல் அலைகளின் கொந்தளிப்புப்போல் இரைந்தபடி ஓடியது.
அந்த ஒன்றுகூடல் முடிந்தவுடன் முகாமைவிட்டு அவன் வெளியேற வேண்டியவன் ஆனான். திவாவிற்கு இதயத்தில் பாராங்கல்லை வைத்திருப்பதைப்போல சுமையாகக் கனத்தது. ஒன்றுகூடல் முடிந்ததும் அவனுடன் வந்தவர்களுடன் அவனும் முகாமைவிட்டு வெளியேறினான்.
பல இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வைத்திருப்பதைப்பற்றி எல்லாஊடகங்களிலும்பரபரப்பான செய்திகள் வந்தவண்ணமேதான் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில்இருந்தஅவளின்தாய்துடித்துப்போனாள். அவளுடனான சிறிய முரண்பாடு காரணமாக நீண்ட நாட்களாக தாய் கோபத்துடன் இருந்தார். ஆனாலும் அவள், தான் பெற்ற பிள்ளை அல்லவா? அவள்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி. கஸ்ரமென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள். இப்போது அவளுக்கு எத்தனை வயதாக இருந்தாலும் அம்மாவுக்கு அவள் எப்போதுமே சிறியவள்தான். அவளைப்பற்றி பலரிடம் விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறார். எந்தவொரு தகவலும்தான் கிடைக்கவில்லை. ஐயோ என்ர பிள்ளை எங்க எண்டாலும் உயிரோட இருக்க வேண்டும் என்று அந்தத் தாய் ஏறி இறங்காத கோவிலே இல்லை. இரண்டு மாதங்களாக வவுனியாவிற்கு வந்து மகளைத்தேட முயற்சித்தார். இறுதியாக எல்லா விசாரணையும் முடித்து பார்ப்பதற்கான அனுமதி தாயாரிற்கு வழங்கப்பட்டது. அதுவும் ஏ-9 பாதையின் ஊடாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் அச்சமும் கொஞ்சம் எட்டித்தான் பார்த்தது.
அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டார். அந்தத் தாயாரிற்குத் தெரிந்தவர்கள் என்று அங்கு யாரும் இருக்கவில்லை. நெஞ்சம் இலேசாய் படபடக்கத்தான் செய்தது. ஜன்னலோரமான இருக்கையில் அந்தத்தாய் அமர்ந்து கொண்டார்.
வயதானஒரு மூதாட்டிம் அருகில் அமர்ந்தார். சரியாக 6.00 மணிக்கு இராணுவத்தினரின் ரக் வண்டியைத் தொடர்ந்து சுமுகமாக இவர்களின் பேருந்தும் போய்க்கொண்டிருந்தது. பேருந்தும் பயணித்துக்கொண்டிருக்கவே அந்தத் தாய் பேருந்துள் இருந்தவர்களை அவதானித்தார்.
அந்தத்தாய்க்கு நிலைமை புரிந்தது. அநேகமானவர்களின் தலைமுடி வெளீரென மின்னின. ஐம்பதைத் தாண்டிய முதியோர்கள்தான் பேருந்தில் பயணிக்கின்றோம் என்பதை நினைக்க உசாராகவே இருந்தது. பேருந்து மீசாலையைத் தாண்டி வரவும் எல்லோரும் தெய்வங்களை வேண்டி வாயினுள் முணுமுணுத்தார்கள்.
பளை, முகமாலைப் பகுதியை அண்மிக்க பயம் கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சை அடைப்பதைப்போல இருந்தது. தலையறுந்த தென்னைகள் அரையும் குறையுமாக எரிந்த வாகனங்கள், பெரிய பெரிய மண் அரண்கள் எல்லாமே போரின் வடுக்களைத் தாங்கி நின்றன. அந்த இடங்களில் இராணுவ வீரர்கள் மழைக்கு முளைத்த காளான்களைப்போல அங்குமிங்கும் நின்றனர்.
இன்னுமொரு பகுதியினர் முகமூடிகளை அணிந்துகொண்டு நின்று மண்;ணை கிளறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணிவெடிகளை அகற்றுகின்றார்கள் என்றும் அவர்கள் அணிந்திருப்பது தற்பாதுகாப்புக்கான முகமூடி என்பதும் அந்தத் தாயாரிற்கு புரிந்தது. 

அவர்களின் பேருந்து ஆனையிறவை அடைந்தது. வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளே பயங்கர சுழிகள் நிறைந்த கடலின் சுழற்சிபோல மனம் வேகமாக சுழன்றுகொண்டிருந்தது.ஆனையிறவை புலிகள் மீண்டும் கைப்பற்றியபோது உலகமே அதிசயித்து நின்றதும், ஏன் அந்தத் தாய்கூட ஆச்சரியப்பட்டு தமிழ், சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் விழுந்து விழுந்து படித்ததும் இப்போது அவருக்கு நினைவில் வந்தன.
பரந்தன் சந்தியில் பேருந்து சில நிமிடங்கள் நின்றன.ஐயோ என் மகள் உயிருடன் இருப்பாளா? இப்படியான கெடூரமான போரில் அவள் எப்படித்தான் தப்பியிருப்பாள்? என்று அந்தத் தாயாரின் மனம் நியாயமாகக் கேள்விகேட்டு பதில் தெரியாமல் வரண்டு தவித்தது.மோட்டார் கருவிகளோடு சந்தியிலிருந்த புலிவீரன் குட்டிசிறியின் சிலை, நிலத்தில் விழுந்து குப்புறக்கிடந்தது. சின்னாபின்னமாகச் சிதறிக்கிடக்கும் வீடுகள், கடைகள், பாடசாலைகள், கூரைகளுடன் இடிந்து பிரண்டு கிடக்கும் பெரிய மண்டபங்கள்,பரந்தன் சந்தியிலிருந்த ஊர்தி சுத்திகரிப்பு நிலையத்தில் எரிந்து கருகி எலும்புக்கூடாய்க்கிடக்கும் வாகனங்களின் எச்சங்கள்.
கிளிநொச்சி விளையாட்டு மைதானத்திற்குப் பக்கத்தில் இருந்த கிளிநொச்சி நகரத்துக்கான நீர்த்தாங்கி,அரைவாசி மண்ணில் புதைந்து தெரிந்தது. இவற்றைப் பார்த்த அந்தத் தாயாரிற்கு இந்த இடத்தில் யாரும் உயிர்தப்பி இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது.'என்ர செல்ல மகளுக்கு உயிருக்கு ஒன்றும் நடந்திருக்கக்கூடாது' என்று மனதில் நினைத்தபடி, அடியோட சரிந்துகிடந்த முருகனைப் பார்த்ததும், சிதைந்து கிடந்த மாதாவைப் பார்த்தும் வணங்கியபடியேதான் இருந்தார் அந்தத் தாயார்.
கிளிநொச்சி பொது மருத்துவமனையைப் பார்த்து கதிகலங்கினார். இதற்கே இந்த நிலையா? இங்குதான் என் பிள்ளையும் நின்று வேலை செய்தாள். ஜன்னல் ஊடாகத் தலையை நீண்டி மருத்துவமனை வளாகத்தை பார்த்தார் அந்தத்தாயார்.அந்த இடமோ எந்தச் சன நடமாட்டமும் அற்று, சுடுகாடாய் தெரிந்தது.வீதியோரமாக வளர்ந்திருந்த புதர்கள், வேலிக் கிளுவைகள் எல்லாம் சடைத்து நின்றன. பெரிய மரங்களெல்லாம் கந்தகப் புகையால் கருகி பெரிய பெரிய பூதங்கள் நிற்பதைப்போல அச்சமூட்டின.
ஒட்டிய வயிறுடன் நாக்குத் தொங்க சிதைந்த வீட்டு வாசலிலே தனது எஜமானை எதிர்பார்த்துக் கிடக்கும் நாயைப் பார்க்க இன்றைக்கோ நாளைக்கோ அது செத்துவிடும்போலத் தெரிந்தது 'நாங்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கின்றோம்' என்று சொல்வதைப்போல நான்கைந்து பசுமாடுகளும் சில கன்றுகளும் பேருந்துக்கு எதிராக வீதியை ஊடறுத்துத் துள்ளிப் பாய்ந்தன. அந்தத்தாய் கண்களை மூடி சற்று அயர்ந்துவிட்டார்.
அன்றிரவு வவுனியாவில் இருந்த விடுதி ஒன்றில் தங்கிவிட்டு காலையில் மகளைத்தேடும் படலத்தைத் தொடங்கினார்.கச்சேரிக்குச் சென்று மகளின் பெயர் முகவரியைக் கொடுத்து விசாரித்துப் பார்த்தார். உறுதியில்லாமல்தான் என்றாலும் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருக்கலாம் என அறிந்து கொண்டாள். துடித்துப் பதைத்தபடிதான் தன் பிள்ளையைப் பார்க்க மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குச் சென்றார்.
முதல் பேருந்தில் ஏறி காலை 6.00 மணிக்கே முகாம் வாசலுக்கு வந்துவிட்டார் அந்தத் தயார். 9.00 மணிவரை அந்த முகாமிலுள்ள காவல் அதிகாரியின் தற்காலிக அடைப்பில் காத்துக்கிடந்தார். உணர்வுகள் அம்புகளைப்போல மனதுக்குள் மாறி மாறிப் பாய்ந்து கொண்டிருந்தன. தன் செல்ல மகள் எப்படி இருப்பாளோ? கடைசியாக அவளைப் பார்த்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தாயின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
சனங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். அந்தத் தாய்க்கு எல்லாமே புதிதாகத்தான் இருந்தது. தன் மகள் இப்போது எப்படி இருப்பாளோ? தன்னால் அவளை இனங்காண முடியுமோ? அவள் தன்னைக்கண்டுவிட்டு கதைக்காமல் போய்விடுவாளோ? என்றவாறான ஏக்கங்களுடன் முட்கம்பி வேலிக்குள் அந்தத்தாய் நிற்கின்றாள்.என் மகள் வருவாளா, வருகிறாளா? என அந்தத்தாயின் கண்கள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன. பதற்றமும் ஏமாற்றமும் ஏக்கமும் அவரின் மனதைப்போட்டு வாட்டி வதக்கிக்கொண்டிருந்தன. -- தொடரும் ...............
மிதயா கானவி

No comments:
Post a Comment