திவாவின் மனதை இனந்தெரியாத சுமையொன்று அழுத்திக்கொண்டிருந்தது.
நடுச்சாமத்தில் வானத்தில் கருமையான மழைமுகில்கள் அசைந்தன. அது கனவா நனவா என்று திவாவுக்கு இனங்காணத் தெரியவில்லை. திடீரென மழை கொட்டத் தொடங்கிவிட்டது. திவா தான் படுத்திருந்த பாயை வாரிக்கொண்டு கொட்டிலுக்குள் குனிந்தபடி நுழைந்தான். குனியாமல் அசண்டையீனமாகச்சென்று வாயில்தடியில் பல தடவைகள் தலையில் அடி வாங்கியிருக்கிறான்.
மின்சாரம் நின்றுபோயிருக்க வேண்டும். எங்கும் ஒரே இருளாக இருந்தது. அந்தக் கொட்டிலில் தங்கியிருந்தோர் எல்லோருமே அதற்குள் படுத்திருக்க முடியாது. ஆண்கள் எல்லோரும் பொதுவாக வெளியில்தான் உறங்குவார்கள். திடீரெனப் பெய்த மழையால் ஆளாலுக்கு ஓடிவந்து குடிசைக்குள் நின்றார்கள். எல்லோரும் படுக்க இடம்போதாது என்ற காரணத்தால் ஆங்காங்கே குந்திக் கொண்டார்கள். அக்கா சிறிய போத்தில் விளக்கொன்றை பற்றவைத்தார். அதன் சுவாலை ஒழுங்காக எரியாமல் காற்றில் ஆடியது. அதை அணையவிடாமல்அக்காவேதனகைகளால்மறைப்புப்பிடித்துக்கொண்டிருந்தார்.

வெளியில் காற்றுவேறு பலமாக வீசியது. ஒரு சுழல்காற்று அடித்தால் போதும் அந்தக் கொட்டிலும்கூட காற்றில் பறந்துவிடும்.
திடீரென, இருந்தவர்களெல்லாம் மாறி மாறி எழுந்தார்கள். வெளியில் பாய்ந்த வெள்ள நீரெல்லாம், உடைத்துக்கொண்டு குடிசைக்குள் வந்தது. முக்கியமான பொருட்களை எடுத்து நனையாமல் பாதுகாப்பாக உயரத்தில் வைத்தார்கள். அத்தானும் திவாவும் மண்ணை அணைத்து கொட்டிலுக்குள் வெள்ளம் வராமல் தடுத்தார்கள். எனினும் தொடர்ச்சியாகமழை கொட்டித்தள்ளியதால் வெள்ளம் அதிகரித்தது. களிமண்சேறு குடிசைக்குள் நிறைந்தது. குழந்தைகளையும் தூக்கி தோள்களில்போட்டுக்கொண்டார்கள். நித்திரைக் குழப்பத்தில் சிறுவர்களும் அழுதார்கள். அவர்களைச் சமாளிப்பதும் பெரும்பாடாகிப் போனது. அன்றைய இரவு முழுவதும்,உறக்கமில்லாத மழையுடனேயே கழிந்தது.
திவா வன்னியில் வாழ்ந்த நாட்களிலேயே மீள்குடியேற்ற அமைச்சின் செயலகத்தில் வேலை செய்தவன். இடப்பெயர்வுகள் காரணமாக அந்த அமைச்சுக்கும் அவனுக்குமான தொடர்புகள் அற்றுப்போயிருந்தன. தொடர்ந்தும் தனது கடமையைச் செய்ய அனுமதி தருமாறு முகாமிலிருந்தே மீள்குடியேற்ற அமைச்சுக்கு பல கடிதங்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தான். அந்தக் கடிதங்கள் ஒன்றும் விழலுக்கிறைத்த நீராக ஆகிவிடவில்லை என்பதை அறிவிக்கும் முகமாக அவனுக்குப் பதில் கடிதம் வந்திருந்தது. விரைவில் அவனுக்கான கடமை இடத்தை தெரிவிப்பதாகவும் தொடர்ந்தும் அமைச்சின் பணியாளராக அவனால் செயற்பட முடியுமென்றும் அக்கடிதம் குறிப்பிட்டிருந்தது. அதன்பொருட்டு திவாவின் மனம் சற்று நிம்மதி பெற்றிருந்தது. ஆனாலும் அவளைவிட்டு விலகிப்போவதை நினைக்க நெஞ்சு வலித்தது.
'அவனது உயிர்வாழ்வின் முக்கியமான காலகட்டங்களில் எல்லாம் வந்துபோனவளின் முகத்தை இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டேனா? பெயர்கூடத் தெரியாமல்...... அவள்கூடவா என்னை மறந்துவிட்டாள்?அவளேன் மறந்திருக்கவேண்டும். அவள் என்னை நினைவில் வைத்திருக்க அவளுக்காக நான் என்ன செய்தேன்? தனது சுயநலத்திற்காக அவளிடமிருந்த பொருளைக்கூட நான்தான் களவாக எடுத்துச் சென்றிருக்கிறேன்.'
அவனுடைய வெளி மனமும் உள்மனமும் வாதாடிக்கொள்ளத் தொடங்கிவிட்டன.அந்த நினைவுகள் தந்த வேதனையால் உடலும் மனதும் வலித்தது, வியர்த்துக்கொட்டியது. எப்போது இந்த நரகத்தை விட்டுத் தொலைவேன் என்றிருந்தவனுக்கு அவளைவிட்டுப் போவதை நினைக்க,முகாமைவிட்டு வெளியேறுவது என்பது பெரிய வேதனையாகத்தான் இருந்தது.

அவளேன் அப்படி இருக்கிறாள்? உயிரே மிச்சமென ஊசலாடிய வன்னியின் கடைசி நாட்களில்கூட சாவைச் சவாலாக்கி எறிகணை மழைக்குள்ளும் விழுந்தெழுந்து நிதானமாகக் கடமை செய்தவள் அல்லவா அவள். அவளுக்கா இந்த நிலை? ஐயோ, எத்தனைபேரின் உயிர்களைக் காப்பாற்றி விட்டவள். அவள் சந்தோசமாக வாழவேண்டுமே...... என்றெல்லாம் திவாவின் மனம் அல்லாடிக்கொண்டு கிடந்தது.
அப்போது முகாமின் கிராமசேவையாளரின் உதவியாளர் அங்கு வந்தார். வெளியில் சென்று வேலையை ஆரம்பிக்க அனுமதிகிடைத்த மீள்குடியேற்ற அமைச்சின் கடிதத்தை அவர்தான் திவாவிற்கு கொடுத்தார். அதில் அன்று பகல் பத்துமணிக்கு அவனை வவுனியா அலுவலகத்தில் சந்திக்குமாறு கோரப்பட்டிருந்தது.
மின்னல் வேகத்தில் பொறிதட்டியது அவளின் நினைவு. அவனால் என்ன செய்யமுடியும் என்பது அவனுக்கே தெரியவில்லை. உடனடியாக அவன் வேலைக்குப் புறப்பட்டே ஆகவேண்டும். இந்த வாய்ப்பைக் கைவிட்டால் அவன் மிகப்பெரிய முட்டாள். யாரிடமும் தேடிச்சென்று விடைபெற்றுப்போக அவனுக்கு அவகாசமில்லை. அவனுடன் கூடத்தங்கியிருந்த, குடிசையில் வாழ்ந்தவர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டு விடைபெற்றான்.
அவனது மனம் அவனிடம் இல்லை. அவன்தான் அந்த முகாமிலேயே தன் இதயத்தைத் தொலைத்து விட்டானே. எப்படி அவனால் நிம்மதியாக வெளியில் போக முடியும். மனது அங்கேயே நிற்க அவனது கால்கள் மட்டும் முகாமைவிட்டு வெளியேறின.
திவா மீண்டும் வேலைக்குச்செல்ல ஆரம்பித்துவிட்டான். அவன் எப்போதும் தனது கடமைகளை சரிவரச்செய்யவேண்டும் என்று நினைப்பவன். அவனுடைய பத்து வயதிலேயே அவனுடைய தந்தை இறந்துவிட்டார். அம்மாதான் அவனையும் தங்கையையும் படிப்பித்து ஆளாக்கியவர். மரக்கறி வியாபாரம் செய்து கற்பித்தார். அதனாலோ என்னவோ அம்மாமீது உயிரையே வைத்திருந்தான் திவா. இப்போது அந்த அம்மாவும் தங்கையும் அவனுக்கு மீண்டும் கிடைத்துவிட்டார்கள். தங்கையின் மகள் பவிதாக்குட்டிகூட மீண்டும் அவனுக்குக் கிடைத்துவிட்டாள். ஆம் அவர்கள் வவுனியாவின் நகர்ப்புறக் கிராமமொன்றில் வாடகை வீடொன்றில் தற்காலிகமான வசிப்பிடத்தை அமைத்திருந்தார்கள். அது திவாவிற்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.
எனினும் 'அவளது' களையிழந்த முகம் தண்ணீரில் தோன்றும் பிரதிபிம்பம்போல அடிக்கடி அவனது மனதில் தோன்றி அவனது நிம்மதியை விரட்டிக்கொண்டிருந்தது. அவள்பற்றிய இனம்புரியாத ஏக்கமும் தேடலும் அவனுக்குள்.
அந்த மென்மையானவளுடன், கருணையுள்ளம் கொண்டவளுடன் மனந்திறந்து கதைக்கவேண்டும். அவள் என்மடியில் முகம் புதைத்து தன் சோகங்களை எல்லாம் சொல்லி அழுது தீர்த்துவிட வேண்டும் என்று அவன் மனதில் தோன்றிய உணர்வுகளை நினைக்க அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.
'நான் எதற்காக அவளைப்பற்றி இவ்வாறெல்லாம் நினைக்கின்றேன்? அவள்தான் என்னவளா? எனக்குக் கிடைப்பாளா? அவள் கறுப்புத்தான் என்றாலும் அதிலும் அழகானவளாகவே இருந்தாள். அவள் என் மனசுக்குள்ளேயே வாழ்கிறாள். கொஞ்சமும் விலகிவிடாமல் மனசோடு நிற்கிறாள் தன் சோகங்களைச் சுமந்தபடி.'
' அந்த லூசைப் போய்....' என்று எழுந்த மனச்சாட்சியை அதட்டி அடக்கினான்.
'அவளுக்கு எதற்காக லூசு?' என்ற கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தான்.
'ஏனென்றால் அவள் அன்று உடுத்தியிருந்த உடை அப்படித்தான் இருந்தது. அவளின் முகத்தில் சோகம் அப்படி அப்பிக்கிடந்தது.'
'சிலவேளை மாற்றுடை ஏதும் இல்லாமல் இருந்திருக்கலாம் இல்லையா?'
'ம். அவளுக்கு அன்றே உதவாமல் போனது நான் செய்த எவ்வளவு பெரிய தப்பு'
இவ்வாறெல்லாம் திவாவின் இதயம் அவள்பற்றிய சோகத்தால் பிழியப்பட்டது. எப்படிப்பட்ட அவள் இப்படியாகிவிட்டாளே என்ற ஏக்கம் அவனை பலமாக வாட்டியது. சதாகாலமும் அவள்தான் அவனது கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் நடமாடினாள்.-------- (தொடரும்)
மிதயாகானவி

No comments:
Post a Comment