உணர்வுகள் எல்லாம் செத்துவிட்டவளாய் அவள் மெதுவாக வந்தாள். தாய்தான் அவளிற்குக் கிட்டவாகச்சென்று கம்பி வேலிக்கு மேலாகக் கைகளைப்போட்டு தன் மகளைக் கட்டியணைக்க முயன்றாள்.'யார் நீ?'என்கின்ற தோரணையில் வெறித்துப் பார்த்தாள் மகள். அவ்வளவுதான். அந்தத்தாயின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.ஏனென்று தெரியாமலேயே மகளும் அழதாள்தாய்தான் தன் மனதைத் தேற்றிக்கொண்டு என்ன நடந்ததென மகளிடம் கேட்டறிய முயன்றாள். எனினும் அதைப்பற்றி ஒருவார்த்தைகூடக்கேட்காமலேயே சந்திப்புக்கான நேரம் முடிவடைந்துவிட்டது.எல்லோரையும் ஒவ்வொருவராக கடமையில் நின்ற சிப்பாய் வெளியில் அனுப்பினான்.அந்தத் தாயாரையும் பத்தே நிமிடத்திற்குள் வெளியேற்றிவிட்டான். எதுவுமே பேசாத அழுகையுடன் மாத்திரமே அவர்களின் சந்திப்புநேரம் முடிந்துவிட்டது. அப்படித்தான் அங்குநின்ற பலரது நிலைமையும் அமைந்திருந்தது. அந்தத் தாயார் மனதுக்குள் அழுதுகுளறியபடியே வெளியேறினார்.
அவளின் வாழ்க்கை வழிநெடுக, வலியும் வேதனையும் நிராகரிப்பும் நிறைந்ததாய் நகர்ந்து கொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்தபின் அவளது மனது ஓரளவு அமைதிப்பட்டிருந்தது எனலாம். ஆனாலும் உடல் நோயெதிர்ப்புச் சக்தியை இழந்தமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மேலதிக சிகிச்சைக்காக அவள் மருத்துவமனைக்குச் செல்லவேண்டி இருந்தது. அன்று திங்கட்கிழமையாக இருந்தமையால் நோயாளர்களது நெருக்கடி மருத்துவமனையில் அதிகமாகவே இருந்தது. அவளும் முகாமிலிருந்து வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அன்று திவாவும் தனது மேலதிகாரியுடன் மருந்துவமனைக்கு வந்திருந்தான்.
எதிர்பாராத விதமாக அவளை மருத்துவமனையில் கண்ட திவாவிற்கு உணர்வுகள் கொந்தளித்தன. அவனது கால்கள் இயங்க மறுத்தன. தன்னை ஒருவாறு அமைதிப்படுத்த முயன்றபடியே அவளருகே வந்துசேர்ந்தான்.
'அக்கா,' என்று விக்கித்தான். எங்கோ கேட்ட குரலாய் இருக்கிறதே என்று நினைத்தபடி திரும்பிய அவளின் பார்வையில் புதிய ஒளி பிரகாசித்தது. ஆனாலும் அது அதிக நிமிடங்கள் நிலைத்து நிற்கவில்லை. மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டது.அடுத்து வைத்தியரிடம் உள்ளே செல்லுமாறு தாதி அழைத்தார்.
'சங்கவி,சங்கவி. வாங்க. உள்ள போங்க'திவா துடித்துப் போனான். வாழ்க்கையில் என்னென்ன விசித்திரங்கள் எல்லாம் நடக்கின்றன. ஏனிப்படி? எத்தனை நாட்களாய் அறிந்த தெரிந்த ஒருத்தியின், மிகவும் வேண்டப்பட்டவளாய் மனம்சொல்லும் ஒருத்தியின் பெயர்கூடத் தெரியாமல் கடந்த அந்த நாட்களை நினைக்க அவனுக்கு விசித்திரமாகத்தான் இருக்கிறது.
'சங்கவி.... சங்கவி.....'என்று முணுமுணுத்தது அவனது இதயம். அவளது பெயரை அறிவதற்காக எத்தனை தடவைகள் அலைந்திருப்பான். இதோ அவளின் பெயரைத் தெரிந்துகொண்டுவிட்டான். அவளுக்கு அருகில்தான் நிற்கிறான். சங்கவி எப்போது வெளியில் வருவாள் எனக் காத்திருந்தான். எனினும் உள்ளேசென்ற அவள் விரைவில் வருவதாகக் காணவில்லை. அவனது அவசரத்திற்கு வைத்தியரிடம் சென்றவள் உடனேயே திரம்பி வருவாளா?
நேரமோ வேகமாக ஓடியது.திவா மேலதிகாரியுடன் புறப்படவேண்டி இருந்தது. அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிட்டுச்செல்ல மனமின்றித் தவித்தான். அதே மருத்துவ மனையில் வேலை செய்யும் பார்த்தீபனின் உதவியை நாடி ஓடினான். 'தீபன், எனக்கொரு உதவி செய்யணும்' என்ற திவாவின் குரலில் அவசரம் தெரிந்தது.
'யாருக்கு என்ன? உடம்பு சரியில்லையா?''இல்ல மச்சான். நான் அவசரமா போகவேண்டி இருக்கு. வைத்தியரின் அறையில் எனக்குத் தெரிந்த ஒருவர் போயிருக்கிறார். பெயர் சங்கவி. அவளது தற்போதைய முகவரியை வாங்கி எனக்கொருக்கா போன்ல சொல்லணும்''அவ்வளவுந்தானா. செய்தால் போச்சு. நானும் பார்;த்தால் போச்சு.''அவள் உன்னோட கதைப்பாளா தெரியேல்ல. மஞ்சள் நிற சுடிதார் போட்டிருக்கிறாள். மெனிக்பாம்ல இருந்து வந்திருக்கவேணும்.' என்றபடி தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்தான்.
'நான் போட்டுவாறன்டா' என்றவன் இரண்டடி வைத்துவிட்டு
'மறந்திடாதடா' என்றான்.'கவலைப்படாமல் போ மச்சான். நான் இப்பவே போய் விசாரிக்கிறன்' என்று கையசைத்தான் பார்த்தீபன்.
அலுவலக வேலையைக்கூட திவாவினால் நிம்மதியாகச் செய்ய இயலவில்லை. யார் தொலைபேசி எடுத்தாலும் பார்த்தீபனோ பார்த்தீபனோ என்று பலதடவை ஏமாந்தான். அவனின் தொலைபேசி இலக்கத்தை வாங்காமல் வந்ததுதான் பெரிய தப்பு. இவனாவது எடுத்துக் கேட்டிருப்பான். அந்தநேரம் அவனது இலக்கத்தை வாங்கத் தோணவில்லையே.... அவளைக் கண்டால் நான் கொதித்துப் போகிறேனேன்? ஏனென்றே புரியவில்லை. சங்கவியுடன் ஒருநாள்கூட நான் என்னைப்பற்றிக் கதைக்கவில்லை. ஏன் என்னால் அவளை மறக்க முடியவில்லை?மனமே ஏன்? ஏன் இப்படி ஏமாற்றப்படுகிறேன்? நான்; முற்பிறப்பில் யாரையும் ஏமாற்றி இருப்பேனோ? இன்றுகூட சற்று முன் அவளைக் கண்டிருந்தால் அவளுடன் கதைத்திருப்பேனே. சங்கவி என்னிடம் மனம்விட்டுக் கதைத்திருப்பாளா? இல்லை உன்னைத் தெரியாது என்று அவமானப் படுத்தியிருப்பாளா?பதிலை யாரிடம் கேட்கலாம்? அவள்தான் காணல் நீராய் என்முன்னால் தோன்றி மறைந்து போகிறாளோ?
இன்று எதற்காக வைத்தியசாலைக்கு வந்திருப்பாள்? சின்னச்சின்ன வருத்தங்களுக்கெல்லாம் முகாமைவிட்டு வெளியில் அனுப்பமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அப்படியானால் பெரிய வருத்தம்தானோ? என்றெல்லாம் அவனது மனது அவளுக்காகத் துடித்துக்கொண்டிருந்தது. வீட்டில்கூட யாருடனும் அவன் மகிழ்ச்சியாகப் பேசுவதில்லை என்றானது. தானும் தன்பாடுமாக இருந்தான். படுப்பதற்கு அவனுக்குப் பஞ்சணை இருந்தது. பார்ப்பதற்கு சினிமா இருந்தது. உண்பதற்கு அம்மா சமைத்துவைக்கும் சுவையான உணவு இருந்தது. எனினும் எதிலுமே அவனுக்;கு நாட்டம் இருக்கவில்லை. சங்கவி. சங்கவி உன்னை நான் எப்ப பார்த்து கதைப்பேன். எப்பிடியெல்லாம் தேடி அலையிரன். நீ மட்டும் அப்பப்ப வந்து என்ர மனசைமட்டும் தொட்டுட்டு ஓடிருவாய். இது உனக்கே சரியாய் இருக்கா? நான் படும்பாடு உனக்கெப்படிப் புரியப் போகிறது? உன்னை நான் பார்த்தபோது நீ அணிந்திருந்த கிழிந்த பாவாடையும் அதற்குப் பொருத்தமில்லாத சட்டையுமாய் நீ முகாமில நின்ற தோற்றம்தான் கண்ணுக்குள நிக்கிது. ஆனால் இண்டைக்கு மஞ்சள் சுடிதாரோட பார்த்தது மனதுக்கு ஓரளவு நிம்மதியா இருக்கு. சங்கவி உனக்கு என்ன நடந்தது? ஏன் மாறினாய் என்று அறியாமல் துடிக்கின்றேன்' என்றெல்லாம் தனக்குள்ளேயே நொந்துகொண்டு படுத்திருந்தான்.அவனது தொலைபேசி சிணுங்கியது. வேண்டா வெறுப்பாக எடுத்தான்.
'ஹலோ, யார்?'
'ஹலோ மச்சான் நான் பார்த்தீபன்'
என்றதும் திவா துள்ளி எழுந்தான். ..................தொடரும் ..................
மிதயா கானவி


No comments:
Post a Comment