.jpg)
அந்தப் புனர்வாழ்வு முகாமில் அவளும் அவளது நண்பிகள் இருவரும் இருந்தார்கள். அவர்கள் மூவரும் வன்னிப்போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு மனதளவில் மிகவும் நொந்துபோயிருந்தார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற எந்த லட்சியமும் தெரியாதவர்களைப்போல அல்லது இல்லாதவர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால் நடைப்பிணங்களாகத்தான் உயிர்வாழ்ந்தார்கள்.
அங்கிருக்கும் பலர் அவளில் இரக்கப்படுவதைப்போலப் பார்த்தாலும் அவள் எவருடனும் கதைப்பதில்லை. தன்னைப்பற்றி எவரிடமும் அவள் வாய்திறப்பதே இல்லை. அதனால் அவளை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. தனியே அழுவாள். சிலவேளைகளில் சிரிப்பாள். தலையைப்போட்டு அடித்துக்கொள்வாள். எனினும் நிதானத்துடன் நடந்தும் கொள்வாள். நினைவுகளால் நாளுக்குநாள் அரிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில்த்தான் நின்றாள். உண்மையில் அவள் யாரென்று அவளுக்கே புரியவில்லை.
திவா அந்த முகாமைவிட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நீண்டநாட்களுக்குப்பின் அவனுக்கு மாதாந்தக் கொடுப்பனவு கிடைத்தது. அந்தப்பணத்தில் அவளுக்குப் பொருத்தமான அளவில் மெல்லிய நீல நிறத்தில் சுடிதார் ஒன்றை வாங்கி அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.
அடுத்த விடுமுறை நாள்.எப்படியும் அவளை சந்திக்க வேண்டும் என்ற துடிப்புடன் அந்த முகாமிற்குச் சென்றான். அன்று விடுமுறைநாள் என்பதால் அதிகளவான பார்வையாளர்கள் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். முகாமிற்கு பார்வையிட வந்திருப்பவர்கள் கேட்டுக்கொண்ட பெயர்களை சிலர் ஒலிபெருக்கியில் அறிவித்து வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். பெயரைக் கேட்டவர்கள் எல்லாம் ஓடோடிவந்து தம்மைப் பார்க்க வந்திருப்பவர்களுடன் கதைத்தார்கள். திவா என்ன பெயரைச்சொல்லி அவளை பார்வையாளர் இடத்திற்கு அழைக்க முடியும்?
திவாவிற்கோ பெரிய ஆற்றாமையாக இருந்தது. காவல்துறை அதிகாரியிடம் கதைத்து ஒருவாறு சந்திப்பு இடத்திற்குச் சென்றான். யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று தேடினான். சிலரிடம் அவளின் அடையாளத்தைச் சொல்லி விசாரித்தான். அப்படி யாரும் இல்லையே என்று அவர்கள் கைவிரித்தார்கள். அந்த முகாமில் இயங்கிய தற்காலிக மருத்துவமனைக்கு தகவல் சொல்லி, ஆளனுப்பினான். அங்கிருந்தும் அப்படி யாரும் இல்லையாம் என்ற பதில்தான் கிடைத்தது.
ஊரும் தெரியாது பேரும் தெரியாது. இப்படியே நின்று அவளை தேடிப்பார்ப்பது என்பது முட்டாள்வேலை என்பது புரிந்தது. களைப்போடு அவன் வீட்டிற்குத் திரும்பிவிட்டான்.
அழுவது என்பது அவனுக்கு எப்போதுமே பிடிக்காத விடயம். பாடசாலையில்கூட ஒருமுறை ஆசிரியர் அடிக்க அடிக்க அழாமல்நின்று அடிவாங்கியவன் அவன் மட்டும்தான். அந்த அடிவிழுந்த தடத்தைப் பார்த்து அம்மாதான் அதிகம் அழுதார். அவன் எதற்கும் கிறுங்காதவன். அவன்தான் இப்போது தேம்பித் தேம்பி அழுதான். எனினும் அவனது மனது நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தன்னுடைய தேடலில் அவளை கண்டடைவேன் என்று நம்பினான்.
ஆனால் அவளோ அவன் கண்ணில் படவேயில்லை.
'ஆண்டவனே நீர்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' என்று இயலாமை கூடும்போது கடவுளிடம் மன்றாடுவான்.
அன்று அவனது வேலைத்தளம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அன்று அவனுக்கென ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது என்பதை அவனேகூட எதிர்பார்க்கவில்லை. திவாவுடன் பணிபுரியும் அவனுடைய நண்பன் அவனைத் தேடிக்கொண்டு வந்தான்
'திவா' 'சொல்லு மச்சான்'
'இண்டைக்கு மெனிக்பாம் முகாமில மீற்றிங். போகப் போறம்.நீயா நானா? ரெண்டுபேரில ஒராள் போகலாம்.'
நண்பனுடைய வார்த்தை அவனுக்கு தேனாய் இனித்தது. ஏனென்றால் அவள் மெனிக்பாம் முகாமில்தானே இருக்கிறாள்.
'டேய் மச்சான் அந்த இடத்துக்கு நான் போறன்டா. நான் போறன். நான்தான் போகணும்' என்று திவா பரபரப்பானான்.
தன்னை விநோதமாகப் பார்த்த நண்பனின் பார்வையை திவா பொருட்படுத்தவில்லை.
'மாட்டன் எண்டாமல் என்ன விடடா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்' என்று சிறுபிள்ளையைப்;;;;;;போல துள்ளிக் குதித்தான்.
'சரிடா நீ போகலாம்.'
'ஐயோ...... தேங்க்ஸ்டா'
'ஆனால்......'
'என்னடா ஆனால்?'
'இல்ல அப்பிடி உனக்கு அவ்வ்வ்வளவுக்கு வேண்டியவர்கள் யார்டா இருக்கிறாங்க அங்க? சொல்லவே இல்லையே' என புருவம் உயர்;த்தி கிண்டலாகக் கேட்டான். பதிலுக்கு திவா எதையும் சொல்லாமல் சிரித்துவிட்டு தான் புறப்படவேண்டியதற்கான அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினான்.
திவா பயணித்த வாகனம் வேகமாக மெனிக்பாம் முகாமிற்குச் சென்றுகொண்டிருந்தது. திவாவின் மனமோ வாகனத்தைவிட வேகமாக அவளிடம் பறந்துவிட்டிருந்தது.
சடின் பிரேக்குடன் வாகனம் முகாமின் வாயிலில் நின்றது. அப்போதுதான் திவா அவளுடைய நினைவுகளிலிருந்து மீண்டான்.
சரியாக இரண்டு மணிக்கு ஒன்றுகூடல் ஆரம்பமாக இருந்தது. முகாமிற்குள் கால்வைத்தவுடனேயே திவாவின் கண்கள் அவளைத் தோடத் தொடங்கின. எல்லோரது முகத்தையும் பார்த்துப் பார்த்து ஏமாந்துபோனான்.
'அவளை இன்றைக்கு எப்படியாவது கண்டுபிடித்தே தீரவேண்டும்' என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்.
அந்த முகாமின் முக்கியஸ்தர்கள், வைத்தியர்கள், இராணுவ அதிகாரிகள் என பலர் அந்த ஒன்றுகூடலில் கலந்திருந்தனர். அவளும் ஒரு வைத்தியராக, பழைய வைத்தியராக இங்கே வரமாட்டாளா என திவாவின் மனம் பதறியது.
அந்த ஒன்று கூடலில் முக்கிய பிரதிநிதியாகத்தான் திவாவும் வந்திருக்கிறான். அவன் கதைக்க வேண்டிய விடயங்களை கதைத்துவிட்டு அமர்ந்திருந்தான். ஏனைய பிரச்சினைகள் கதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திவாவின் தொழில் அவனுக்கு மிகவும் பிடித்தமான தொழில்தான். ஆனாலும் இப்போது அது மிகப்பெரிய சுமையாகத் தெரிந்தது அவனுக்கு. எல்லோரும் எதை எதையோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் திவாவிற்கோ அவளின் நினைவுகளில் இருந்து விடுபடவே முடியவில்லை. கண்களை தூரத்தில் அலையவிட்டுவிட்டு, மனதை அவளின் நினைவுகளில் விட்டுவிட்டு அவன்மட்டும் மேடையில் குந்திக்கொண்டிருந்தான்.
திடீரெனதிவாவின் மூளையில் பொறி தட்டியது. கண்கள் தூரத்தில்செல்லும் அவளையே உற்றுநோக்கின. உதடுகள் மட்டும் மெலிதாய் அசைந்தன.
'ஐயோ அவள்தான். அவளேதான்.'
வெட்ட வெளியான முகாமில், தூரத்தில், மஞ்சள் நிறச்சட்டையுடன் அவள் போய்க்கொண்டிருப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தனது உடலைக்கூடக் கொண்டுநடக்கும் சக்தி அற்றவளாய்.... உயிருடன் நடமாடும் எலும்புக்கூடாய், குனிந்த தலை நிமிராமல், பதுமைபோல, எவரையும் கவனியாது போய்க்கொண்டே இருந்தாள்.
No comments:
Post a Comment